புதுச்சேரியின் எல்லையில் உள்ளது பிள்ளைச்சாவடி மீனவ கிராமம். இந்த பகுதியின் ஒரு பாதி புதுச்சேரியிலும் மற்றொரு பாதி தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்திலும் உள்ளது. ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் இந்த பகுதியில் கடல் அரிப்பால் வீடுகள் அடித்து செல்லப்படுவது தொடர்ந்து வருகிறது. இதுவரை கடந்த 10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகள், 500க்கும் மேற்பட்ட மரங்கள்ஆகியவை கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வங்க கடலில் மாண்டஸ் புயல் உருவாகி உள்ள நிலையில் கடல் சீற்றத்தால் மேலும் 10க்கும் மேற்பட்ட வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் பாறைகள், தூண்டில் முள் வளைவு, அமைத்து மக்களை காக்க வேண்டும் என்று கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் கோட்டகுப்பம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில் தற்போது மாண்டஸ் புயல் மற்றும் கடல் சீற்றம் காரணமாக பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலையில் அடித்துச் சென்று கடலில் மூழ்கி வருகிறது.
இதற்கிடையே பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் இன்று முதல்வர் ரங்கசாமி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் வல்லவன் மற்றும் எம்எல்ஏ கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: ஆளுநரை திரும்பப்பெற வழக்குத் தொடர்வது சரியல்ல - ஆளுநர் தமிழிசை