டெல்லி: ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு 2022 மார்ச் மாதம் வெளியான இப்படம் பாக்ஸ் ஆஃபிஸிலும் ஹிட் அடித்து, ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
இந்த நிலையில், 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "நாட்டு நாட்டு" பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. சிறந்த பாடல் பிரிவில், 'நாட்டு நாட்டு' பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விருது வழங்கும் விழாவில், நாட்டு நாட்டு பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை அதன் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், கோல்டன் குளோப் விருதை வென்றதற்காக 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சிறப்பான சாதனைக்காக, இயக்குநர் ராஜமெளலி, நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர் - ராம் சரண், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாகவும், இந்த விருது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் முதல்முதலாக கோல்டன் குளோப் விருதைப் பெற்ற பாடல் 'நாட்டு நாட்டு' என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Golden Globes 2023: கோல்டன் குளோப் விருதை வென்ற ‘Naatu Naatu’ பாடல்