டெல்லி : வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவை பார்வையிட அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது.
மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் 50 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், மாநிலமே கலவர பூமியாக காட்சி அளிக்கிறது. வன்முறைச் சம்பவங்களால் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் மீண்டும் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் அரசு ஈடுபட்டு உள்ளது.
இதனிடையே கடந்த 24ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக, அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு கூடுதல் படைகளை அனுப்புமாறும், அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழு மாநிலத்தை பார்வையிட அனுமதிக்குமாறும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒவ்வொரு பிரதிநிதிகளின் கருத்தையும் கேட்டுக் கொண்டதாகவும் மணிப்பூர் கலவரத் தடுப்பை தான் கவனித்துக் கொள்வதாகவும் தன்னை நம்புமாறும் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தை பார்வையிட அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவுக்கு மத்திய உள்துறை அமைசர் அமித் ஷா அனுமதி மறுத்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மணிப்பூர் மாநிலத்தை அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழு பார்வையிட இது சரியான நேரம் இல்லை என அரசு கருதுவதாகவும், மாநிலத்தில் அமைதி நிலை திரும்ப மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பைரன் சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்த நிலையில், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் மாநிலத்தை கலவரத்தை கட்டுப்படுத்த குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : "அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் சிறை செல்வார்" - பாஜக எம்.பி.!