தர்மசாலா (ஹிமாச்சலப் பிரதேசம்): ஹிமாச்சலப்பிரதேச மாநிலம், காங்க்ரா மாவட்டம், ஷாபூரைச் சேர்ந்தவர் ஹரிஷ் மகாஜன். இவர் தனது மனைவி பூஜாவின் பிறந்தநாளுக்கு வித்தியாசமான பரிசு கொடுக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். அதன்படி நிலவில் இடம் வாங்கி பரிசளிக்கலாம் என முடிவு செய்துள்ளார்.
இதற்காக, முறைப்படி நியூயார்க்கில் உள்ள சர்வதேச லூனார் லேண்ட்ஸ் சொசைட்டியில் (International Lunar Lands Society of New York) விண்ணப்பித்தார். ஓராண்டுகாலம் நடைமுறைகள் மேற்கொண்ட பின், நிலப்பதிவு தொடர்பான ஆவணங்கள் ஆன்லைனில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, ஹரிஷ் கூறுகையில், "என் மனைவி மீது கொண்ட அன்பில் இதை செய்தேன். பணத்தைப் பற்றியது அல்ல" என்றார். மேலும், நிலம் வாங்க செலுத்தப்பட்ட தொகை குறித்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
பூஜா கூறுகையில், ''இது போன்ற ஒரு பரிசை நான் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது'' என்று தெரிவித்தார். பூஜாவின் பிறந்த நாளான நேற்று (ஜூன் 23) இந்தப் பரிசை ஹரிஷ் வழங்கி உள்ளார்.
நிலவில் நிலம் வாங்கிய ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டாவது நபர் ஹரிஷ் மகாஜன் ஆவார். முன்னதாக, ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில், உனா மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகனுக்கு நிலவில் நிலம் வாங்கிப் பரிசளித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகருக்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள காரைப் பரிசளித்த தயாரிப்பாளர்!