நஹன்: ஹிமாச்சல பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள நவுரங்காபாத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சஞ்சீவ் அட்ரி பிரம்மாண்டமான இங்க் பேனா ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த பேனா 42 கிலோ எடையும், 20 அடி நீளமும் கொண்டது. இந்த பேனா வெறும் காட்சிப் பொருள் மட்டுமல்ல, வேலையும் செய்யும் என தலைமை ஆசிரியர் சஞ்சீவ் அட்ரி கூறினார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், "இந்த பேனா வெறும் காட்சிப் பொருள் அல்ல, அது வேலை செய்யும். அதில் இங்க் ஊற்றலாம். இதில் சிசிடிவி கேமரா, ஒலி சென்சார் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. சென்சார் மூலம் ஆசிரியர்களின் உரையை பதிவு செய்து பள்ளி நிர்வாகத்திற்கு அனுப்ப முடியும். இந்த சிசிடிவி கண்காணிப்பாக பயன்படும்.
அலாரம், ஆடியோ பிளேயர் உள்ளிட்டவையும் பொருத்தப்பட்டுள்ளன. 45,000 ரூபாய் செலவில் மரம் மற்றும் இரும்பினால் இந்த பேனா உருவாக்கப்பட்டது. இதனை நானும் என்னுடன் பணிபுரியும் ஆறு ஆசிரியர்களும் இணைந்து உருவாக்கினோம்.
இந்த பிரம்மாண்ட பேனா பள்ளி மாணவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதுபோன்ற புதுமையான முயற்சிகளால் பள்ளியின் சேர்க்கை அதிகரிக்கும். கடந்த ஆண்டு எங்கள் பள்ளியில் 64 குழந்தைகள் இருந்தனர். இந்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஹைதராபாத்தில் ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா என்ற ஆசிரியர், 18 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட பேனா ஒன்றை தயாரித்தார். அது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
இதையும் படிங்க:ஜெயமாலா உட்பட 8 யானைகளை மீட்க தமிழ்நாடு வருகை தரும் அஸ்ஸாம் வனத்துறையினர்