திருவனந்தபுரம் (கேரளா): மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, கேரளத்தில் நேற்று இரவு (அக்டோபர் 15) முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை சமிஞ்சை கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை வெளியேற்றும் வேலைகளில் மாவட்ட நிர்வாகமும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
2018ஆம் ஆண்டு கேரளத்தில் கடுமையான வெள்ளம் ஏற்பட்ட போது பெய்ததைப் போல பத்தனம்திட்டாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் அதன் கொள்ளவை எட்டிவிட்டன.
திருவனந்தபுரம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் அணைகளில் நீர் திறப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. கனமழையுடன் சனிக்கிழமை காலை முதல் இரு மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் ஏற்பட்டது.
அவசர மற்றும் அவசிய பயணங்களை மட்டும் மேற்கொள்ளுமாறு திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். நீர்நிலைகளுக்கு அருகே மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனந்தோடு அணையின் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கேரளத்தில் மிதமான மழையும், 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் வீசக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: VIRAL: பூனை என நினைத்து புலியைப் பிடித்த பிரபலம்!