மகாராஷ்ட்ரா: மகாராஷ்ட்ரா மாநிலம், மும்பையில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று(ஜூலை 14) காலை முதல் மும்பையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். காட்கோபர், செம்பூர், பாண்டுப், முலுண்ட், குர்லா, சியோன், வடலா, பாந்த்ரா உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.
மும்பையில் குர்லா, செம்பூர், தாதர், பாந்த்ரா, பைகுல்லா, சியோன், சுனாபட்டி போன்ற பகுதிகளில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் மழை பெய்தது. இதன் காரணமாகப் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மும்பையில் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் தேங்கியதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. மிலன் சுரங்கப்பாதை மற்றும் அந்தேரி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. கனமழை காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் காலையில் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை கடல் பகுதிகளில் அலைகள் அதிக உயரத்துக்கு மேல் எழும்பும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே டெல்லி, இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் கடந்த 9ஆம் தேதி அன்று, 41 ஆண்டுகளுக்குப் பிறகு பெருமழை கொட்டியது. 24 மணி நேரத்தில் 15 சென்டி மீட்டர் மழைப் பதிவானது. இந்த கனமழையால் டெல்லியில் குடியிருப்புகள், சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது. யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Delhi Flood : யமுனையில் வரலாறு காணாத வெள்ளம்... வீதிக்கு வந்த டெல்லி மக்கள்!