டெல்லி : அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்து மருந்துகளுக்கும் இந்தியில் பெயர் வைக்குமாறு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். தேசிய மற்றும் கலாச்சார ஒற்றுமையின் சின்னமாக இந்தியை மத்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரிப்பதாக மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இந்தி மொழி பேசும் பகுதிகளில் அலோபதி, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதம் ஆகிய அனைத்து மருந்துகளுக்கும் இந்தியில் பெயர் வைக்குமாறு மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பரிந்துரைத்து உள்ளார். டெல்லியில் நடைபெற்ற சுகாதார அமைச்சகத்தின் ஹிந்தி சலாஹ்கர் சமிதியின் கூட்டத்தில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் மருந்துச் சீட்டுகளிலும், இந்தியில் மருந்துகளை பரிந்துரைக்குமாறு மருத்துவர்களுக்கு அமைச்சர் மாண்டவியா தெரிவித்து உள்ளார். இந்தி மொழியின் ஊக்குவிப்பு மற்றும் அதிகரிக்கும் பயன்பாடு, நாட்டின் பொதுவான மொழியாக அதன் பரந்த பன்முகத்தன்மையாக தொடர்பு கொள்ள உதவும் என மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார்.
தேசிய மொழியின் முதன்மைத்துவத்தை புரிந்து கொள்வது முக்கியம் என்று கூறிய மன்சுக் மாண்டவியா, தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஒற்றுமைக்கும் இந்தி ஒரு பாலத்தை வழங்குவதாக கூறினார். மேலும் நாம் நமது பிராந்திய மொழிகளைப் பயன்படுத்தலாம் என்று அதேநேரம் இந்தியை தேசிய மொழியாக மதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் நாம் அனைவரும் நமது தேசியத் தன்மையை வடிவமைக்க உதவும் மொழியாக இந்தியைப் பயன்படுத்துவோம் என்று மன்சுக் மாண்டவியா கூறினார். அமைச்சகங்கள் தங்கள் அலுவல் பணிகளில் இந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து கூறிய மன்சுக் மாண்டவியா, சுகாதார அமைச்சகம் இந்தியை நமது தேசிய மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக அங்கீகரிப்பதாக கூறினார்.
இந்தி சலாஹ்கர் சமிதி என்பது மத்திய அரசின் ஒவ்வொரு அமைச்சகத்திலும் இந்தியில் அதிகாரபூர்வ பணிகளை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு குழுவாகும் ஆண்டுக்கு இரண்டு முறை இந்த அமைப்பு கூடி ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கூட்டத்தில், எம்.பி.க்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையும் படிங்க : சுற்றுலாத் துறை மேம்பாட்டின் உச்சம்... ராமோஜி பிலிம் சிட்டிக்கு சிறப்பு விருது...