புதுச்சேரி மருத்துவமனைகளிலுள்ள, கரோனா வார்டுகளில் கர்ப்பிணிகள் யாரும் வேலை செய்ய வேண்டாம் என புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வார்டுகளில் பணிபுரியும் சுகாதாரத்துறைப் பணியாளர்கள், மருத்துவர்கள் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அவ்வாறு தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மருத்துவர்கள், செவிலியர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் ஆறு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்நிலையில், கரோனா வார்டுகளில் கர்ப்பிணி பணியாளர்கள் பணியாற்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கரோனா நோயாளிகள் இல்லாத பிற வார்டுகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும், கரோனா வார்டுகளில் பணியாற்றத்தகுதியானவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.