சராங்கர்-பிலாய்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் சராங்கர்-பிலாய்கர் மாவட்டத்தில் உள்ள சரியா என்னும் கிராமத்தில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கஜேந்திர பிரசாத் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர், அப்பள்ளியில் பயிலும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனை அச்சிறுமி அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த டிச.25 அன்று மாலை, கிராமத்தினர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை கிராமத்தினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதனால் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள் தலைமை ஆசிரியர் பதுங்கி உள்ளார். இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, பள்ளியில் பதுங்கி இருந்த தலைமை ஆசிரியரை மீட்டு காவல்துறை வாகனத்துக்குள் அமர வைத்துள்ளனர்.
ஆனால் ஆத்திரம் அடங்காத கிராமத்தினர், வாகனத்துக்குள் இருந்த தலைமை ஆசிரியரைக் காவல் துறையினரை மீறித் தாக்கியுள்ளனர். சம்பவத்தின் வீரியத்தை உணர்ந்த எஸ்பி ராஜேஷ் குக்ரேஜா தலைமையிலான காவல் துறையினர், கிராமத்துக்கு வந்தனர். இதனையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் தலைமை ஆசிரியரை பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கஜேந்திர பிரசாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு இடையூறு செய்த கணவர் கூலிப்படை வைத்து கொலை.. பெண் போலீஸ் அதிகாரி சிக்கியது எப்படி?