சூரத்: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை மத்திய அரசு "அம்ரித் மகோத்சவ்" என்ற பெயரில் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக "ஹர் கர் திரங்கா பிரச்சாரம்" நடத்தப்படவுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை, நாடு முழுவதும் ஒரு வாரத்திற்கு 72 கோடி மூவர்ண கொடிகள் ஏற்றப்படும். இதற்கான ஏற்பாடுகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
கொடிகளை தயாரிக்க, நாடு முழுவதும் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்களை மத்திய அரசு அணுகியுள்ளது. 10 கோடி தேசிய கொடிகள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை சூரத் நகர உற்பத்தியாளர்கள் பெற்றுள்ளனர். சிறியது முதல் பெரியது வரை பல்வேறு அளவுகளில் தேசிய கொடிகள் தயாரிக்கப்படவுள்ளன. இந்த கொடிகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மூவர்ண கொடி தயாரிப்பு குறித்து பேசிய ஜவுளி உற்பத்தியாளர் ஜீது வகாரியா, " சூரத்தில் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் சுமார் 10 கோடி மூவர்ண கொடிகளை தயாரிக்க உள்ளோம்.
5 ஆலைகள் கொடிகளை தயாரிக்க தயாராக உள்ளன. பிவாண்டியில் இருந்து கொடி தயாரிப்புக்கான ரோட்டா துணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஜூலை 26ஆம் தேதிக்குள் 10 கோடி மூவர்ண கொடிகளை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு பணிகளை மத்திய அரசு கவனித்து வருகிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க: மீண்டும் சர்ச்சை கிளப்பிய இயக்குநர் லீனா - இப்போ யார் கையில் சிகரெட்?