ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா படை விலகிய பின், நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அங்கு வசிக்கும் சர்வதேச தூதர்களை அந்தந்த நாட்டினர் மீட்டு வருகின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து ஆப்கன் நாட்டினரும் அங்கிருந்து வெளியேற தொடர்ந்து முயற்சி செய்துவருகின்றனர். தாலிபன்களின் ஆட்சியின் கீழ் தங்கள் உரிமை பறிபோய்விடும் என்ற அச்சம் ஆப்கன் மக்கள் பெரும்பாலானோருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆப்கனில் நிலவும் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றன. குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபை ஆப்கன் நிலவரம் குறித்துத் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டுவருகின்றன.
இந்நிலையில், வாய்ப்பு கிடைத்தால் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குவாட்ரெஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், "யாருடன் பேச வேண்டும் எப்போது பேச வேண்டும் என்று தெளிவான விளக்கம் கிடைத்தால் தாலிபான்களுடன் பேச நான் பேச தயாராகவுள்ளேன்.
பயங்கரவாத செயல்பாடுகள், மனித உரிமை மீறல் நிலவுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துவருகிறேன். முன்னாள் ஆப்கன் அரசுக்கும், தாலிபான்களுக்கும் இடையே சுமுக பேச்சுவார்த்தையை கத்தார் அரசு முன்னெடுத்துள்ளது.
இதை நாங்கள் வரவேற்று ஆதரவு தருகிறோம். அங்கு மனித உரிமை, பெண்கள் உரிமையை நிலைநாட்ட அனைத்து நாடுகளும் ஒரு குரலில் பேச வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஹைதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் குழந்தைகள்- யுனிசெஃப் கவலை