திருச்சூர்: கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற குருவாயூர் கோயிலுக்கு ஆனந்த மஹிந்திரா கடந்தாண்டு "மஹிந்திரா தார்" வாகனத்தை நன்கொடையாக வழங்கினார். இந்த காரை கோயில் நிர்வாகம் ஏலம் விட முடிவு செய்தது. அதன்படி, டிசம்பர் 18ஆம் தேதி ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அமல் முகமது அலி என்பவர் கலந்துகொண்டு ரூ.15.10 லட்சத்திற்கு வாகனத்தை ஏலம் எடுத்தார்.
ஆனால், இந்த ஏலத்தில் ஒருவர் மட்டுமே கலந்துகொண்டதாகவும், இந்து கோயிலுக்கு நன்கொடையாக வந்த காரை மாற்று மதத்தினருக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும் சர்ச்சைகள் கிளம்பின. இதனால் ஏலம் ரத்து செய்யப்பட்டது. ஐந்து மாதங்கள் கழித்து இன்று (ஜூன் 6) மறு ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 15 பேர் கலந்துகொண்டனர்.
இறுதியில் கேரளாவின் அங்காடிபுரத்தை பூர்வீகமாக கொண்டு துபாயில் தொழில் செய்துவரும் விக்னேஷ் என்பவர் ரூ. 43 லட்சத்துக்கு வாகனத்தை ஏலத்தில் எடுத்தார். இதுகுறித்து விக்னேஷ், அவரது தந்தை விஜயகுமார் கூறுகையில், “இது கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாகனம் இது. கடவுளின் வாகனம். ஆகவே பணத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஏலத்தில் வெற்றி பெற எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராகவே இருந்தோம்” என்று தெரிவித்தனர். இந்த காரின் சந்தை மதிப்பு ரூ.15 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆம்ஃபிபியஸ் வாகனங்கள் உருவாக்குவதில் மேம்பட்டுள்ளோம் - மகேந்திரா