குஜராத்: அகமதாபாத் நகரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் உறவினர்களாக ஒன்றிணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த எல்லிஸ்பிரிட்ஜ் போலீசார் நேற்று (பிப்.21) நள்ளிரவில் சோதனை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 89 இளைஞர்களை அதிரடியாக கைது செய்தனர்.
ப்ரீதம் நகர் அகாரா அருகே உள்ள லட்சுமி நிவாஸ் என்ற குடியிருப்பில் திருமணத்தையொட்டி உறவினர்கள் அனைவரும் சூதாடுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருமணம் செய்ய இருந்த 2 மணமகன்கள் உட்பட 89 பேர் இந்த சூதாட்டத்தில் சிக்கியுள்ளனர்.
24 வயதான வர்ஷில் தேசாய் மற்றும் காஷிஷ் தேசாய் ஆகிய இளைஞர்களுக்கு இருவேறு இடங்களில் திருமணத்திற்கு முன்பு நேற்று நிச்சயதார்த்தம் செய்தனர். மறுநாள் (இன்று) திருமணம் நடக்க இருந்த நிலையில், இவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டு 89 பேரில் 2 மணமகன்களையும் சேர்த்து போலீசார் கைது செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகமதாபாத் எம் பிரிவு ஏசிபி எஸ்டி படேல் கூறுகையில், இரண்டு வீடுகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 89 பேரை இரவு போலீசார் கைது செய்தனர். 3,74,155 ரூபாய் ரொக்கம் தவிர ரூ.1.58 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்; மேலும், 35 இருசக்கர வாகனங்கள், 18 நான்கு சக்கர வாகனங்கள் என 1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர்கள் அனைவரும் இரு வேறு இடங்களில் நடக்க இருந்த திருமணத்திற்காக வந்தவர்கள் எனவும்; கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா, பிகாரில் 101 கிலோ தங்கம் பறிமுதல்.. சிக்கிய சூடான் கும்பல்..