அகமதாபாத் (குஜராத்): சர்கேஜ் - காந்தி நகர் நெடுஞ்சாலையில் இஸ்கான் பாலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம் மீது மஹிந்திரா தார் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை பொதுமக்கள் கூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே வேகமாக வந்த ஜாகுவார் சொகுசு கார் மக்கள் கூட்டத்தில் புகுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் இரண்டு போலீசார் உள்பட 9 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. நேற்று (ஜூலை 19) இரவு இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து செக்டார் 1 இணை போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை வேறு வழியில் மாற்றி விட்டு சீர் செய்தனர்.
இந்த விபத்து குறித்து போக்குவரத்து காவல் உதவி ஆணையர் எஸ்.ஜே.மோடி கூறுகையில், “சர்கேஜ் - காந்தி நகர் நெடுஞ்சாலையில் இஸ்கான் பாலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் மீது மஹிந்திரா தார் கார் மோதியது. இந்த விபத்தை காண ஏராளமான மக்கள் சாலையில் திரண்டு இருந்துள்ளனர். அப்போது கர்னாவதி கிளப்பில் இருந்து வேகமாக வந்த ஜாகுவார் சொகுசு கார் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூட்டத்தின் மீது மோதியது” என அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் குஜராத்தில் உள்ள பொடாட் மற்றும் சுரேந்திரநகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் படிப்பிற்காக அகமதாபாத்தில் தங்கியிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்களில் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அக்ஷய் சாவ்தா (போடாட்), க்ருனால் கோடியா (போடாட்), அமன் கச்சி (சுரேந்திரநகர்), அர்மான் வாட்வானியா (சுரேந்திரநகர்), நிரவ் (அம்டா), தர்மேந்திர சிங் (அகமதாபாத்- போலீஸ் கான்ஸ்டபிள்) ஆகியோர் ஆவர்.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் சோலா சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தினை ஏற்படுத்திய ஜாகுவார் காரின் ஓட்டுநரும் காயமடைந்திருப்பதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் துணை போலீஸ் கமிஷனர் (போக்குவரத்து மேற்கு) நிதா தேசாய் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ட்விட்டரில் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ள குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமும் அறிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், “அகமதாபாத்தில் உள்ள இஸ்கான் பாலத்தில் நேற்று இரவு நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.