குஜராத்: கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின்போது, இஸ்லாமியப் பெண்மணி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 3 வயது குழந்தை உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர்.
சம்பவம் நடந்தபோது, 20 வயதான அப்பெண் கர்ப்பிணியாக இருந்தார். இந்த சம்பவத்தில் அப்பெண் உயிர் பிழைத்தார். இதுதொடர்பான வழக்கில் காவல்துறை உள்பட அனைத்தும் அந்த இளம்பெண்ணுக்கு எதிராக செயல்பட்டது. ஆதாரங்களை அழித்து, அவருக்கு மிரட்டலும் விடுத்தனர்.
அந்த இஸ்லாமியப் பெண்மணியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என தெரிவித்தனர். அவரது குடும்பத்தினரின் உடல்கள் எந்தவிதப் பரிசோதனையும் செய்யப்படாமல் எரிக்கப்பட்டன. ஆனால், அந்த இளம்பெண் மனம் தளராமல் போராடினார்.
அதன் விளைவாக, இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2008ஆம் ஆண்டு, இவர்கள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குற்றவாளிகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நிலையில், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி குற்றவாளிகளில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை கருத்தில் கொள்ளும்படி குஜராத் அரசுக்கு அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து கமிட்டி ஒன்றை உருவாக்கிய குஜராத் அரசு, அக்குழுவின் பரிந்துரைப்படி, 11 குற்றவாளிகளையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. அதன்படி, 11 பேரும் நேற்று(ஆக.15) விடுதலையாகினர். இவர்களை விட குறைவான குற்றங்களை செய்தவர்கள் இன்னும் சிறைவாசம் அனுபவிக்கும் நிலையில், கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட இவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.