அகமதாபாத்: குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக முடிந்து வரும் நிலையில், மறுபுறம் நாட்டின் பாரம்பரியமிக்க கட்சியான காங்கிரஸ் படுதோல்வியைச் சந்திக்கும் நிலையில் உள்ளது.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில், ஏறத்தாழ 32 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ.க. 124-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட வரலாற்று வெற்றியை பா.ஜ.க. பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
2017 சட்டமன்றத்தேர்தலில் 77 இடங்களை கைப்பற்றி பா.ஜ.கவுக்கு கடும் நெருக்கடி கொடுத்த காங்கிரஸ் கட்சி, கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத அளவில் மோசமான செயல்திறனை எதிர்கொண்டு வருகிறது. கடந்த 1985ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 149 இடங்களைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடிய காங்கிரஸ் கட்சியின் சாதனையை 2022 தேர்தலில் பா.ஜ.க முறியடிக்கும் நிலை தொடர்கிறது.
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மவுன பிரசாரம் மற்றும் மேலிடத் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் பெரியளவில் தலை காட்டாததே மோசமான தோல்விக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரும் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துவிட்டதாக யூகங்கள் வெளியாகி உள்ளன.
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இரு இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் 12 மணி நேர நிலவரப்படி, குஜராத்தில் 26.9 சதவீத வாக்குகளே பெற்றுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி 12 சதவீத வாக்குகள் பெற்றும் 3-வது கட்சியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாதனை மேல் சாதனை.. முன்னிலையால் குஷியான பாஜகவினர்...