குஜராத் மாநிலம் ராஜ்கோட் காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்த நான்கு ஊடகவியலாளர்கள் 'ஸ்டிங் ஆபரேஷன்' நடத்தியுள்ளதாகவும், தங்கள் கடமைகளைச் செய்வதைத் தடுத்ததாகவும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான்கு ஊடகவியலாளர்களும் உரிய அனுமதியின்றி தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
டிசம்பர் 2ஆம் தேதி, தீ விபத்தில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான செய்தியை, பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். அதில், கைதுசெய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளுக்கும் விஐபி சிகிச்சை அளிக்கப்பட்டு, காவல் நிலையத்தில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், ஊடகவியலாளர்கள் காவல் நிலையத்தின் சில காணொலிகளையும் படம்பிடித்து பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.
இது குறித்து பேசிய காவல் துறை அலுவலர் ஒருவர், " தீ விபத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேரும் நவம்பர் 30ஆம் தேதி ராஜ்கோட் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களிடம் தனி அறையில் விசாரணை நடத்தப்பட்டது.
எவ்வித விஐபி சிகிச்சையும் வழங்கப்படவில்லை. நான்கு ஊடகவியலாளர்கள் மீதும் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை" எனத் தெரிவித்தார்.