கேசவகிரி: ஹைதராபாத் அருகே உள்ள பந்தலகுடா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும், தனியார் பள்ளிப் பேருந்து ஓட்டுநர் முகமது சகாரியா (26) என்பவருக்கும் கடந்த 13-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பந்தலகுடாவில் உள்ள மசூதியில் இருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் வழக்கப்படி திருமணத்துக்கு முன்பாகவே, மணமகள் வீட்டில் இருந்து மணமகனுக்கு சீதனம் கொடுக்க வேண்டும்.
அந்த வகையில், கடந்த சனிக்கிழமை மணமகன் சகாரியாவின் வீட்டுக்கு, மணமகள் வீட்டில் இருந்து பல்வேறு சீதனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில் கட்டில் உடைந்து இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் சகாரியா, பழைய கட்டிலை சீதனமாக அனுப்பியதாக குற்றம்சாட்டினார். இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை மசூதியில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்துக்கு மணமகன் சகாரியா அங்கு செல்லவில்லை.
இதையடுத்து மணமகளின் தந்தை, சகாரியாவின் வீட்டுக்கு நேரில் சென்றுகேட்டபோது, பழைய கட்டிலை கொடுத்து அனுப்பியதாக வாக்குவாதம் செய்தார். திருமணத்துக்கு வர முடியாது என்றும் மறுத்துள்ளார். இதுகுறித்து மணமகளின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், சகாரியாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், தாம் திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறினார். எனினும், தங்களது பெண்ணுக்கு இப்படிப்பட்ட மணமகன் தேவையில்லை எனக் கூறி, பெண் வீட்டார் திருமணத்தை கைவிட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.