சிட்டோர்க் : ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற துணை காவல் ஆய்வாளர் பூர் சிங் ரனாவத். கடந்த டிசம்பர் 4ஆம் தேதி இவரது மகள் மதுவுக்கு திருமணம் நடத்தி உள்ளார். மதுவுக்கும், ஜெய்ப்பூரை சேர்ந்த மகேந்திர சிங் ரத்தோட் என்பவரின் மகன் அம்ரித் சிங்கிற்கு திருமணம் நடைபெற்றது.
ராஜ்புத் சமூக மக்களின் வழக்கத்தின் படி திருமணத்திற்கு முன் பெண் வீட்டின் சார்பில் வரதட்சனை கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதன்படி மணமகள் மதுவின் தந்தை பூர் சிங் ரனாவத் மற்றும் மதுவின் சகோதரர் பர்வத் சிங், தாம்பூலத் தட்டில் 11 லட்ச ரூபாய் பணம் வைத்து மணமகன் வீட்டார்க்கு வழங்கி உள்ளனர்.
இதை வாங்க மறுத்த மணமகனின் தந்தை மகேந்திர சிங் ரத்தோட், வரதட்சனை பணத்தை மீண்டும் மணமகள் வீட்டாரிடம் வழங்கிவிட்டு ஒரு ரூபாய் மற்றும் தேங்காய் ஒன்றை வரதட்சனையாக பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அங்கு குழுமியிருந்த மக்களை அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
முன்னதாக, மணமகளின் தந்தை பூர் சிங் ரனாவத் கடந்த 2013ஆம் ஆண்டு தனது மகன் பர்வத் சிங்கின் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து 1 ரூபாய் மற்றும் தேங்காய் மட்டும் வரதட்சனையாக வாங்கிக் கொண்டு திருமணம் நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது. கால்ம் தொட்டு பெண் வீட்டாரிடம் வரதட்சனை பெறுவதை ஒரு தரப்பினர் வழக்கமாக கொண்டு இருந்த நிலையில், ராஜஸ்தானில் அதற்கு ஏறுக்குமாறாக நடந்து உள்ள சம்பவம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து உள்ளது.
இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் நெட்டிசன்கள் இந்த சம்பவம் நாட்டிற்கே முன்னுதாரணம் என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் விடுதி செப்டிக் டேங்க் கழுவிய விவகாரம் - அரசின் நடவடிக்கை என்ன?