டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டதற்காக 12 எதிர்க்கட்சி எம்பிக்களை இடைநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும் (ஜூலை 28) இதே நிலை தொடர்ந்தது. இதில் காகிதங்களை வீசி மரியாதை குறைவாக நடந்துகொண்ட காரணத்துக்காக 12 எம்பிக்களை இடைநீக்கம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தப் பட்டியலில் தமிழ்நாடு எம்பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர்கள் அல்லாமல், குர்ஜீத் சிங், டிஎன் பிரதாபன், ரவ்னீத் சிங், ஹிபி ஈடன், சப்தகிரி சங்கர், வி வைத்திலிங்கம், ஏம் ஆரிப் ஆகியோரும் இதில் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சரின் கையிலிருந்த நகலைப் பறித்து கிழித்து எறிந்த திருணமூல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சோனியா - மம்தா சந்திப்பு: பின்னணி என்ன?