ஆரோக்கிய இந்தியா விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, பாரா சைக்கிளிங் வீரர் ஆதித்யமேத்தா தலைமையில் சென்னையிலிருந்து புதுச்சேரி வந்த மாற்றுத்திறனாளிகளின் மிதிவண்டி பயணத்தை ஆளுநர் மாளிகை அருகே துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றார்.
அப்பயணத்தில் கலந்துகொண்டவர்களை பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை,'புதுச்சேரியை ஒவ்வொரு நிமிடமும் அரசு கவனிக்கிறது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
இன்று சித்ரா பவுர்ணமி; ஆனால் கோயில்கள் மூடப்பட்டிருக்கும். மக்கள் வீட்டில் இருந்து கரோனா விலக பிரார்த்தனை செய்து கொள்ளவும். புதுச்சேரியில் ஆக்சிஜன் தட்டுபாடு இல்லை. ஜிப்மர் மருத்துவமனை உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.
அதனால் பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. அவர்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை அளிக்கப்படுகிறது. கரோனா இரண்டாம் அலை இளைஞர்களை தாக்குகிறது.
இதனால் மே 1ஆம் தேதி முதல் இளைஞர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக வரும் 28ஆம் தேதி முதல் இணையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கரோனா கட்டுபாடுகளை மீறி செயல்படக் கூடாது என்பதற்காகத் தான் புதுச்சேரியில் கட்டுபாடு அதிகரிக்கப்பட்டது.
மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். புதுச்சேரியில் எந்த தட்டுபாடும் இல்லை. சிலர் தவறான அறிக்கை தருகிறார்கள்; அச்சத்தை மக்களுக்கு ஏற்படுத்தாதீர்கள். தைரியத்தை அளியுங்கள்'என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,'தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தாலும் அரசு தான் செலவு செய்கிறது'என்றார் துணைநிலை ஆளுநர் தமிழிசை.