காஷ்மீர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், இன்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியை நேரில் சந்தித்து பேசினர். அத்தியாவசியப் பொருள்களை இலவசமாக வீடுகளுக்கே டெலிவரி செய்யும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட்களை (Reliance JioMarts) காஷ்மீர் முழுவதும் அமைக்க, மத்திய அரசு உதவுகிறது என்பதை முப்தியிடம் முறையிட்டனர். அதுதொடர்பான தரவுகளையும் வழங்கினர்.
வங்கிக் கடன் பெற்று, நேரடி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தங்களால், ரிலையன்ஸ் போன்ற பெருநிறுவனத்தின் ஆன்லைன் விற்பனையுடன் போட்டிப் போட முடியாது என்றும், மேலும் பெருநிறுவனங்கள் தங்களது இடத்தை பிடித்துவிட்டால், கழுகு போல அனைத்தையும் விழுங்கி விடுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
பின்னர் பேசிய மெகபூபா முப்தி, மத்திய அரசு ஜம்மு-காஷ்மீரின் பொருளாதாரத்தை வலுவிழக்க செய்வதாகவும், காஷ்மீரின் செல்வங்களை சுரண்டுகிறது என்றும் குற்றஞ்சாட்டினார். மத்திய பாஜக அரசு, ஒரு புறம் காஷ்மீரில் உள்ள வணிகர்களை அமலாக்கத்துறை, சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட ஏஜென்சிகள் மூலம் அச்சுறுத்தி வருவதாகவும், மறுபுறம் நெருக்கடியான சூழலை பயன்படுத்தி அனைத்தையும் சுரண்ட நினைக்கும் பெருமுதலாளிகளுக்கு உதவுகிறது என்றும் கூறினார்.
ஒட்டுமொத்த ஜம்மு-காஷ்மீரையும் மத்திய அரசு வெளியாள்களின் விற்பனைக்காக வைத்துள்ளதாகவும், வெளியிலிருந்து வரும் பெருமுதலாளிகள் தங்கள் தன்னிறைவுக்காக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, உள்ளூர் வணிகர்களையும், பொருளாதாரத்தையும் அழிக்கும் என எச்சரித்த அவர், இந்த விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.