அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. அதில், காணொலி மூலம் கலந்துகொண்ட பிரதமர் மோடி நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் தபால் தலையை வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், பாகுபாடற்ற வளர்ச்சியை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.
கொள்கை வேறுபாட்டிற்கு இடமே இல்லை
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பாகுபாடு காண்பிக்கப்படாமல் அனைவரும் பயன்பெரும் வகையிலான பாதையில் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது. அந்த பாதையில் அனைவரும் தங்களது கனவை பூர்த்தி செய்து கொள்ளலாம். எந்த மதத்தில் பிறந்திருந்தாலும், நாட்டின் நலனுக்கு ஏற்ற நோக்கங்களை கொள்வது முக்கியத்துவம் பெருகிறது. சமூகத்தில் கொள்கை வேறுபாடு இருக்கலாம். ஆனால். தேச நலனை ஒப்பிடுகையில் மற்ற அனைத்தும் இரண்டாம்பட்சம்தான். நாட்டின் முக்கியத்துவத்தில், கொள்கை வேறுபாடுக்கு இடமே இல்லை.
புதிய இந்தியாவை படைக்க ஒன்றிணைவோம்
இந்த இடத்தில் இருந்து இதனை கூறுவது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் நமக்குத் தந்துள்ளது. கொள்கை ரீதியாக அவர்கள் வேறுபட்டு இருந்தாலும், நாட்டின் சுதந்திரத்திற்காக அதனை ஒதுக்கிவைத்தனர். அவர்கள் சுதந்திரத்திற்காக ஒன்றிணைந்தது போல, நாம் அனைவரும் புதிய இந்தியாவை படைப்பதற்காக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
பொது காரணத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணையும்போது, சிலர் எதிர்மறைான உணர்வுகளை வெளிப்படுத்ததான் செய்வார்கள். புதிய இந்தியா என்ற பொது இலக்கில் நாம் கவனம் செலுத்தினால், அதுபோன்ற உணர்வுகள் அழிந்துவிடும். அரசியலும் சமூகமும் காத்திருக்கலாம். ஆனால், நாட்டின் வளர்ச்சி காத்திருக்காது.
கடந்த நூற்றாண்டில், கொள்கை வேறுபாட்டால் நேர விரயமானது. ஆனால், இப்போது நமக்கு நேரமில்லை. தூய்மை இந்தியா திட்டத்தால் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், இஸ்லாமிய குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறும் விழுக்காடு குறைந்துள்ளது" என்றார்.