புதுச்சேரி: மத்திய அரசின் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. தயவு செய்து அனைவரும் கரோனா நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். கரோனாவைத் தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும்.
மக்கள் கட்டுப்பாடோடு இருந்தால் தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். 29- 40 வயது உள்ளவர்களை கரோனா அதிகம் தாக்குகிறது. அதனால் எச்சரிக்கையுடன் இருக்கவும். நாள்தோறும் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறன.
ஊரடங்கு மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்தும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. ஆகவே மக்கள் சுய கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். மக்கள் கட்டுப்பாடுடன் இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இறப்பு விகிதம் தற்போது அதிகரித்து வருகிறது" என்றார்.