புதுச்சேரி: நாட்டின் 74வது குடியரசு தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய காவலர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவகர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை ஆளுநர் வழங்கினார். இதில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக தெலங்கானா ஆளுநராகவும் உள்ள தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா குடியரசு தின விழாவில் காலை 7 மணியளவில் கலந்து கொண்டார். பின்னர் விழா முடித்துவிட்டு, தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பத்ம பூஷன் விருது பெறும் வாணி ஜெயராம்.. வளர்ந்து வந்த கதை!