சென்னை: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று(டிச.7) தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 25 சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக மக்களவை சபாநாயகருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "ஆளுநர் என்பவர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும்இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு எதிராக செயல்படுகிறார். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கும் அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை மசோதா உள்ளிட்ட 22 மசோதாக்கள் அவரிடம் நிலுவையில் உள்ளன. ஆளுநரின் இதுபோன்ற நடவடிக்கைகள் மாநில அரசின் செயல்பாடுகளை பாதிக்கின்றன, மாநில அரசு மக்கள் நலனுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்களை சென்றடைவதில்லை. எனவே, இந்த அவையில் ஆளுநரின் அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மியால் யாரேனும் இறந்தால் ஆளுநர் தான் பொறுப்பு - ஜி.ராமகிருஷ்ணன்