இந்தச் சட்டத்தின் விதிகள் ஏப்ரல் 27 முதல் நடைமுறைக்கு வந்ததாக உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி, டெல்லியில் 'அரசாங்கம்' என்பது 'துணைநிலை ஆளுநர்' என்று பொருள்படும், மேலும் எந்தவொரு நிர்வாக நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு டெல்லி அரசு துணைநிலை ஆளுநரின் கருத்துக்களைப் பெற வேண்டும்.
"தேசிய தலைநகர் டெல்லி அரசு (திருத்தம்) சட்டம் 2021இன் பிரிவு 1இன் துணைப்பிரிவு (2) ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துதல், மத்திய அரசு ஏப்ரல் 27ஆம் தேதி அந்தச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருகிறது" என்று மத்திய உள் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் கோவிந்த் மோகன் கையெழுத்திட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இந்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில், நிறைவேறியது. மார்ச் 22 அன்று மக்களவையிலும், மார்ச் 24ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேறியது.
இந்த மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியபோது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இதை 'இந்திய ஜனநாயகத்திற்கு சோகமான நாள்' என்று குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.