ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் தலைநகராக ஸ்ரீநகரும் லடாக்கின் தலைநகராக லேவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், லேவை ஜம்மு காஷ்மீரின் ஓர் அங்கமாக ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் நாடாளுமன்ற இறையாண்மை மீது அவநம்பிக்கை விதைக்கும் வகையில் ட்விட்டர் செயல்படுத்துவதாகக் கூறி அந்நிறுவனத்திற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு அமைச்சகம் நவம்பர் 9 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஐந்து நாட்களுக்குள் ட்விட்டர் நிறுவனம் விளக்கமளிக்க வேண்டும் என அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக ஏன் சட்டநடவடிக்கை எடுக்க கூடாது என்பது குறித்தும் அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் 69ஏ பிரிவின் கீழ் ட்விட்டர் நிறுவனத்திற்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.