ஐதராபாத்: வழக்கமாக பிரபலங்கள் பிறந்த நாள் அல்லது முக்கியமான விழா நாட்களை நினைவூட்டும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் மூலமாக தெரிவிக்கும். இந்நிலையில், இன்று (செப் 27) கூகுள் அதனுடைய 25வது பிறந்த நாளை கொண்டாடுவதால் அதற்கான பிரத்யேக டூடுலை வெளியிட்டு உள்ளது.
90களில் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற இரு நண்பர்களான செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜால் உருவாக்கப்பட்டது கூகுள். ஆரம்பக் காலத்தில் பல்கலைக்கழக அளவிலான தேடு பொறியாக மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டு பயனர்கள் கண்டு பிரம்மிக்கும் அளவு வளர்ச்சி கண்டுள்ளது.
கூகுளை உலகம் தழுவிய அளவிலான தேடுபொறியாக மாற்ற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இருவரும் தங்களது ஆய்வு முயற்சிகளைத் தீவிரப்படுத்தினர். பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, கடந்த 1998ம் ஆண்டு செப்டம்பர் 27ம் நாள் கூகுள் இன்க் (Google Inc) அதிகாரப்பூர்வமாக கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது. அமேசான், ஆப்பிள், பேஸ்புக் போன்ற முன்னணி தொழில்நுட்பங்களில் ஒன்றாக தற்போது கூகுள் நிறுவனம் திகழ்கிறது.
கடந்த 24 ஆண்டுக் காலங்களில் கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சி விண்ணைத்தொட்டுள்ளது. 170க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், டேட்டா பாதுக்காப்பிற்காக உலகின் பல்வேறு இடங்களில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட செர்வர்களை கூகுள் நிறுவனம் கொண்டு உள்ளது. மேலும் உலகிலயே அதிகம் சம்பளம் பெரும் தலைமை அதிகாரி கூகுள் தலைமை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் தேடுதளம் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் இருந்தே டூடுல் அதனுடைய ஒரு அங்கமாக இருந்து வருகிறது. 1998ல் பர்னிங் மேன் திருவிழாவை (Burning Man Festival) கொண்டாடும் வகையில் டூடுல் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 25வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக "இன்று அறிமுகமாகியுள்ள எங்களது இலச்சினை முதற்கொண்டு கடந்த 1998-ஆம் ஆண்டிலிருந்து உலகம் நிறைய மாறிவிட்டது. ஆனால் நோக்கம் மாறவில்லை.
உலகிலுள்ள அனைத்துத் தகவல்களையும் ஒழுங்கமைத்து, அதை அனைவரும் அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற வேண்டும். பல கோடிக்கணக்கான மக்கள் தங்களது தேடல்களை மேற்கொள்வதோடு, இணைக்கவும், பணியாற்றவும், விளையாடவும் கூகுளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதற்காக அவர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும் தனது 25ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள், தனது தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழரான சுந்தர் பிச்சையைக் கொண்டுள்ளது, உலகத் தமிழர்களுக்கு பெருமைக்குரிய ஒன்றாகும்.
இதையும் படிங்க: பூமியும், உயிர்களும் உருவானது எப்படி.? 'பென்னு' எரிகல் மூலம் பதில் கிடைக்குமா?