பனாஜி : பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து கோவா மாநிலத்தின் ஆம் ஆம்தி முதலமைச்சர் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
அதன்படி, பண்டாரி சமூகத்தை சேர்ந்த அமித் பலேகர் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மாநில அரசுக்கு எதிராக அமித் பலேகர் அண்மையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம், அவருக்குச் சாதகமாக அமைந்தது. மேலும் அவருக்குப் பெரும் செல்வாக்கை பெற்றது.
முன்னதாக, பழைய கோவாவின் பாரம்பரிய தளத்தை காப்பாற்ற பலேகர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். அந்த இடத்தில் சட்டவிரோத கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.
அதன்பின்னர் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன. கோவா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கவனம் பெற்று வருகிறது. அண்மையில் தேர்தல் ஆணையம் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவித்தது.
உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்ட தேர்தல் பிப்.10ஆம் தேதி நடைபெறுகிறது. கோவாவில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.