சித்ரதுர்கா: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரோஜா ரெட்டி(26) என்ற இளம்பெண், தனது ஐடி வேலை விட்டுவிட்டு, விவசாயம் செய்து வருகிறார். தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் காய்கறிகள், பழங்களை பயிரிட்டு கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார். ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களை சாகுபடி செய்து, அவற்றை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்கிறார். ஐடி வேலையை விட்டுவிட்டு வந்த இவர், தற்போது வெற்றிகரமான விவசாயியாக மாறியுள்ளார்.
தனது பயணம் குறித்து ரோஜா ரெட்டி நம்முடன் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது குடும்பம் ஒரு சாதாரண விவசாய குடும்பம். எனது தந்தை விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்துதான் என்னை படிக்க வைத்தார். ஆனால், அவர் விவசாயத்தில் எப்போதும் நஷ்டத்தையே சந்தித்தார். நான் படிப்பு முடித்ததும் பெங்களூருவில் உள்ள ஐபிஎம் நிறுவத்தில் நல்ல ஊதியத்தில் வேலைக்கு சேர்ந்தேன். கரோனா காலத்தில் வீட்டிலிருந்து பணிபுரிந்தபோதுதான், எனது பெற்றோரின் சிரமங்களை நேரில் பார்த்தேன். அதனால் பெற்றோருக்கு உதவியாக விவசாயம் செய்யலாம் என்று முடிவு செய்தேன். முதலில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பிறகு ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, விவசாயத்தில் போதிய வருவாய் கிடைக்காததற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்தேன். பிறகு ரசாயன உரங்கள்தான் முக்கிய காரணம் என்று கண்டறிந்தேன். அதனால், இயற்கை முறையில் பயிரிட முடிவு செய்தேன்.
அதன்பிறகு, எனது நண்பர்களின் உதவியுடன், 4 லட்சம் ரூபாய் முதலீடு திரட்டி, எங்களது பத்து ஏக்கர் தரிசு நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தோம். மழைநீர் சேமிப்புக்காக 3 குளங்கள், 3 ஆழ்துளை கிணறுகளை அமைத்தோம். வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் தக்காளி, பீன்ஸ், கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டோம். சொட்டுநீர் பாசன முறையில் நீர் பாய்ச்சினோம். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தினோம். நன்றாக விளைச்சல் இருந்தபோதும், எங்களுக்கு விற்கத் தெரியவில்லை. இடைத் தரகர்கள் மூலம் விற்பனை செய்தோம். அதனால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. பிறகு தரகர்களை விடுத்து, நாங்களே விற்பனை செய்ய முடிவு செய்தோம். சுற்றுப்புற கிராமங்களில் வீடு வீடாகச் சென்று, எங்களது இயற்கைக் காய்கறிகளின் நன்மைகளை எடுத்துக்கூறி விற்பனை செய்தோம். பலருக்கு இலவசமாகவும் கொடுத்தோம். எங்களது காய்கறிகளின் ருசி பிடித்தவர்கள் மீண்டும் எங்களிடம் ஆர்டர் செய்தனர். சில சங்கங்கள் மூலம் மங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் விற்க ஆரம்பித்தோம். பின்னர், 'நிசர்கா நேட்டிவ் ஃபார்ம்ஸ்' என்ற இணையதளத்தை தொடங்கினோம். தற்போது மங்களூரு, உடுப்பி, மணிப்பால் ஆகிய இடங்களில் இருந்து அதிகளவில் ஆர்டர்கள் வந்தன.
நல்ல லாபம் கிடைத்ததைத் தொடர்ந்து, மேலும் பத்து ஏக்கரை குத்தகைக்கு எடுத்து, காய்கறிகளுடன், கொய்யா, வாழை, மாதுளை போன்ற பழத்தோட்டங்களையும் அமைத்தோம். தற்போது தினமும் ஒரு டன் காய்கறிகள் விற்பனையாகிறது. கடந்த ஆண்டு 1.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தோம். கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்வது போல விவசாயம் செய்வது எளிமையானது அல்ல என்று கூறியவர்கள் இப்போது என்னிடம் ஆலோசனை கேட்கிறார்கள். என்னை விமர்சித்தவர்கள் இப்போது பாராட்டுகிறார்கள். ஐடி வேலையில் பணியாளராக இருந்த நான், இப்போது எனது தோட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்கி வருகிறேன். மேலும் பல நகரங்களுக்கு ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்களை வழங்குவதே எனது குறிக்கோள்" என்று கூறினார்.
இதையும் படிங்க: பூமியை காப்பாற்ற ஆசிரியர் ஒருவரின் 35 ஆண்டுகால போராட்டம்