திருவனந்தபுரம்: மாநிலங்களவை உறுப்பினர்களாக காங்கிரஸின் வயலார் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேகே ராகேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பிவி அப்துல் வஹாப் ஆகியோரின் பதவிக்காலம் அண்மையில் நிறைவடைந்தது.
இந்த இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. காலியாகவுள்ள இந்த இடங்களை கைப்பற்ற காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் மும்முரம் காட்டிவருகின்றன.
மாநிலங்களவையில் காலியான மூன்று உறுப்பினர்களில் இருவர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியையும், ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியையும் சேர்ந்தவர்கள். ஆனால் தற்போதைய நிலவரப்படி இடதுசாரிகளால் இரு உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். காங்கிரஸில் உள்ள ஒரு இடத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் உரிமை கொண்டாடுகிறது.
இதனால் அங்கு பனிப்போர் நிலவி வருகிறது. மாநிலங்களவையில் இடதுசாரிகள் தங்களது இடத்தை வலுப்படுத்த கேகே ராகேஷின் இடத்துக்கு மற்றொரு மார்க்சிஸ்ட் உறுப்பினரையே தேர்வு செய்ய வேண்டும் என்று கட்டாயம் நிலவுகிறது. மற்றொரு இடத்துக்கு இடதுசாரி கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ ஆன மாணி சி கப்பனை நிறுத்த மார்க்சிஸ்ட் முடிவு செய்துள்ளது.
இதற்கு மாணி சி கப்பன் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சம்மதிக்கவில்லை. அவர்கள் இடைத்தேர்தலில் வெற்றிவெற்ற பாலா சட்டப்பேரவை தொகுதியை தர வலியுறுத்துகின்றனர். இதற்கு மார்க்சிஸ்ட் சம்மதிக்கவில்லை. இதனால் அங்கும் பெரும் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சிக்கு உள்ள ஒரு இடத்தில் குலாம் நபி ஆசாத் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
குலாம் நபி ஆசாத்தை போட்டியிட வைத்தால், முஸ்லிம் லீக் கட்சியையும் சமாதானப்படுத்தியது போல் அமையும். மேலும் அவர் மீண்டும் காங்கிரஸின் குரலாக ஒலிப்பார். பாஜகவும் அவரை சொந்தம் கொண்டாட வாய்ப்புகள் இன்றி போகும். ஆக கேரள மாநிலங்களவை தேர்தலில் பாஜக ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க குலாம் நபி ஆசாத்தை தேர்வு செய்ய வேண்டும். இதற்கு குலாம் நபி ஆசாத் சம்மதிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: விடைபெறும் குலாம் நபி ஆசாத் - கண்கலங்கிய பிரதமர் மோடி!