டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் சமீபத்தில் மாநில வாரியாக பிரச்சாரக் குழு, அரசியல் விவகாரக் குழு, கொள்கை விளக்க குழு, மக்கள் தொடர்பு மற்றும் வெளியீட்டுக் குழு, ஒழுங்காற்றுக் குழு மற்றும் பிரதேச தேர்தல் குழு ஆகியவற்றை அமைத்திருந்தார்.
உடல்நலனை கருத்தில்கொண்டு...: இதன்மூலம், கட்சியின் களச்செயல்பாடுகளை அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டு, இதில் மூத்த தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. அந்த வகையில், கட்சியின் பிரச்சாரக் குழு தலைவராக குலாம் நபி ஆசாத் நேற்று நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக நேற்றிரவு (ஆக. 16) தெரிவித்துள்ளார்.
தனக்கு தலைமை பொறுப்பை கொடுத்ததற்கு நன்றி எனவும், உடல்நலனை கருத்தில்கொண்டு இருந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், காங்கிரஸ் தரப்பிலோ அல்லது ஆசாத் தரப்பிலோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.
திடீர் அறிவிப்பு: குலாம் நபி ஆசாத்தின் இந்த முடிவு கட்சியில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மேலும், இதுபோன்ற முக்கிய பொறுப்புகளில் நியமிக்கும்போது, தலைவர்களுடன் ஆலோசிப்பது கட்சி வழக்கம் என்றும், இந்த விவகாரத்தில் ஆசாத்திடம் கட்சித்தலைமை முறையாக ஆலோசிக்கவில்லையா என்ற கேள்வியும் கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் (ஆக. 15) காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கௌரவ் யாத்திரையில் குலாம் நபி ஆசாத் பங்கேற்றிருந்தார். மேலும், சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை நடத்திய விசாரணை தொடர்பாகவும் அவர் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்படியிருக்கையில், இந்த ஆசாத் திடீர் அறிவிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
நீண்டநாள் புகைச்சல்: மக்களவை எதிர்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற பின், அவரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு கட்சித் தலைமை எம்.பி., பொறுப்பை வழங்கவில்லை என்பதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், 2020ஆம் ஆண்டு கட்சியை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என 23 தலைவர்கள் (G-23 group) கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தது. அதில், குலாம் நபி ஆசாத்தும் ஒருவர் என்பது நினைவுக்கூரத்தக்கது.
சமீபத்தில், கட்சியின், ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைவரை நியமிப்பதில் குலாம் நபி ஆசாத்துக்கும், கட்சித் தலைமைக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆசாத்திற்கு மிக நெருக்கமானவராக கருதப்படும் குலாம் அகமது மிர், ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைவராக இருந்தார். அவர் கடந்த மாதம் தனது பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், புதிய மாநிலத் தலைவராக விகார் ரசூல் வானி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், குலாம் நபி ஆசாத்தின் இந்த திடீர் முடிவு குறித்து, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான அஸ்வானி ஹாண்டா கூறியதாவது,"புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரச்சாரக் குழு என்பது ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்சியின் அடிமட்ட தொண்டர்களை முழுவதாக புறக்கணித்துள்ளது. இது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். எனவே, அந்த குழுவின் மீதான அதிருப்தியால்தான் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: Video:ஒட்டுமொத்த தெலங்கானாவில் ஒலித்த தேசிய கீதம் - பொதுமக்கள் உற்சாகம்