பெர்லின்: இந்தியா டிசம்பர் 1ஆம் தேதி ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இந்தியாவின் தலைமையின் கீழ் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஜி20 ஷெர்பா கூட்டம் நடந்துவருகிறது. இந்த கூட்டத்தில் வங்கதேசம், எகிப்து, மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களில் ஜி20 கூட்டங்கள் நடக்கின்றன. அதில் கலந்துகொள்ள ஜி20 நாடுகளின் உறுப்பினர்களும் வருகை தருகின்றனர். அதன்படி ஜெர்மனி வெளியுறவுத்தறை அமைச்சர் அன்னாலெனா இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இந்த பயணத்துக்கு முன்பாக, இந்தோ-பசிபிக் மட்டுமல்லாமல் சர்வதேச ஒழுங்கை வடிவமைப்பதில் இந்தியா தீர்க்கமான செல்வாக்கைக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று புகாழரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அன்னாலெனா கூறுகையில், "இந்தியாவுக்குச் செல்வது என்பது உலகின் ஆறில் ஒரு பங்கு நாடுகளுக்கு செல்வது போன்றது. அடுத்தாண்டு தொடக்கத்தில், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவாகும். இந்த 21ஆம் நூற்றாண்டில், இந்தோ-பசிபிக் நாடுகள் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் சர்வதேச ஒழுங்கை வடிவமைப்பதில் இந்தியா தீர்க்கமான செல்வாக்கைக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயக நாடாகவும் இந்தியா ஒரு முன்மாதிரியாக உள்ளது. பன்முகத்தன்மை, சுதந்திரம், ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி, அமைதி, ஸ்திரத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக இந்தியா இருக்கிறது. மனித உரிமைகளை வலுப்படுத்துவதில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதும் நமது பணியாகும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் பயன்பாட்டில் இந்தியா முன்னேற விரும்புகிறது. இதனாலேயே ஜெர்மனி இந்தியாவின் பக்கம் நிற்கிறது. ஏனென்றால், காலநிலை மாற்றத்தின் விளைவுகள் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் வாழ்வாதாரத்தை அழிக்கின்றன. ஆகவே, உலக நாடுகள் இடையே காலநிலை மற்றும் பாதுகாப்பு கொள்கை வலுப்படுத்த வேண்டும். இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி20 முடிவுகளுக்கு ஜெர்மனி உறுதியான ஆதரவை வழங்க விரும்புகிறது. டெல்லி, ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கான பயணம் மேற்கொள்ள இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி