டெல்லி: பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் பகுதியாக பஞ்சாப், ஹரியானா, உள்பட 70க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோத கும்பல்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ரகசியமாக இந்தியாவில் உள்ள சமூக விரோத கும்பல்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிகள் செய்து வருவது குறித்து தெரியவந்தது. அதன் அடிப்படையில் அடுத்தடுத்து பல மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் நகரில் உள்ள ஆயுத வியாபாரி ஒருவர் வீட்டில் நடந்த சோதனையில் பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட ஆயுதங்கள் சமூக விரோத கும்பல்களுக்கு விற்கப்படுவது குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ஆயுத கடத்தல் கும்பலை கைது செய்து அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை முதலே பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு 70க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் உத்தரபிரதேசத்தில் உள்ள பிலிபிட் மற்றும் பிரதாப்கர்க் பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப்பில் 30 இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும், ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்புடைய இடங்களிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. சோதனையில் ஆயுத கொள்முதல் மற்றும் கடத்தல் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் வெளிநாட்டு வேலை மோசடி - இருவர் கைது!