பெங்களூரு: வரும் 10-ஆம் தேதி, கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ், பாஜக ஆகிய பிரதான கட்சிகளீன் தேசியத் தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கர்நாடகாவின் பிரதான கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் (JDS) ஆகிய கட்சிகள், அடுத்தடுத்து தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளன. முக்கியமாக அனைத்து கட்சிகளும் பெண்கள் மற்றும் விவசாயிகளை குறி வைத்து தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளன. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிகப்படியான வாக்குறுதிகளை ஒவ்வொரு கட்சியும் அளித்துள்ளது.
குறிப்பாக, அன்னபாக்யா யோஜனா திட்டத்தின் மூலம் 10 கிலோ இலவச அரிசி, மாநில அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் மற்றும் கிரிஹா ஜோதி யோஜனா திட்டத்தின் மூலம் 200 யூனிட் இலவச மின்சாரம் என காங்கிரஸ் வாக்குறுதிகளை அளித்துள்ளது.
அதேநேரம், பாஜக தரப்பில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு வருடத்திற்கு 3 இலவச எல்பிஜி சிலிண்டர் மற்றும் 5 கிலோ தானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், கர்நாடகாவின் நகராட்சிகளில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலுல் அடல் ஆஹாரா கேந்திரா என்ற பெயரில் தரம் வாய்ந்த விலை மலிவான உணவு வழங்கும் திட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் 300 அன்னபூர்ணா கேண்டீன்கள் அமைக்கவும் உறுதி அளித்துள்ளது.
அதேபோல், மாநில கட்சியான ஜேடிஎஸ், கர்ப்பிணிகளுக்கு 6 மாதங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய், 5 இலவச காஸ் சிலிண்டர்கள் மற்றும் விவசாய இளைஞர்களை மணம் முடிக்கும் இளம் பெண்களுக்கு 2 லட்சம் ரூபாய் என வாக்குறுதிகளை அளித்துள்ளது. இவற்றில், பாஜக தனது நலம் சார்ந்த திட்டங்களில் இலவசங்களை அறிவித்தால், வருமான வரி செலுத்துவோர் பாதிக்கப்பட்டு, அதிகமான வருமான வரி செலுத்த வேண்டி இருக்கும் என்ற பட்சத்தில், இலவசங்கள் அறிவிப்பதை கடுமையாக விமர்சித்தது.ஏன், 2020 டெல்லி தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக எடுத்த ஆயுதமே, இலவசங்களை மறுப்பது என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தற்போது பாஜகவே இலவசங்களை அறிவித்தது பேசுபொருளாக மாறி உள்ளது.
காங்கிரஸ் வாக்குறுதிகள்
- அன்னபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் 10 கிலோ இலவச அரிசி
- மாநில அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்
- கிரிஹா ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் 200 யூனிட் இலவச மின்சாரம்
- வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய்
- கிரிலஹக்ஷ்மி யோஜனா திட்டத்தின் மூலம் மாதம் 2 ஆயிரம் ரூபாய் மானியம்
பாஜகவின் முக்கிய அறிவிப்புகள்
- வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்
- யுகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை தினங்களில் இலவச கேஸ் சிலிண்டர்
- ஒவ்வொரு ஏழை குடும்பங்களுக்கும் அரை லிட்டர் இலவச நந்தினி பால்
- வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு மாதந்தோறும் 5 கிலோ இலவச அரிசி
- மூத்த குடிமக்களுக்கு வருடாந்திர முழு உடல் பரிசோதனை இலவசம்
ஜேடிஎஸ் அளித்துள்ள வாக்குறுதிகள்
- கர்ப்பிணிகளுக்கு 6 மாதங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய்
- 5 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்
- விவசாய இளைஞர்களை மணந்து கொள்ளும் இளம் பெண்களுக்கு 2 லட்சம் ரூபாய்
- ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய்
- காவலாளிகளுக்கு (security guards) மாதம் 2 ஆயிரம் ரூபாய்.
இதையும் படிங்க: டெல்லி மதுபான முறைகேட்டு வழக்கில் தொடர்பா? ஆம் ஆத்மி எம்.பி. உடைத்த உண்மைகள்!