சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தயாரிப்பான ஆவின் பாக்கெட்டுகளில் தயிர் என்பதை குறிப்பிட 'தஹி' என எழுத வேண்டும் என மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடிதம் எழுதியது. இதே போன்று கர்நாடகா ஆந்திரா மாநிலங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டிருந்தது. பிராந்திய மொழிகளில் தயிர் என அடைப்புக்குறியில் வேண்டுமானால் எழுதிக் கொள்ளலாம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், தயிர் மற்றும் Curd என இரு மொழிகளில் மட்டுமே அச்சிடுவோம் என உறுதியாக தெரிவித்துவிட்டோம் என கூறினார். இது இந்தி திணிப்பு நடவடிக்கை என்பதால் தமிழ்நாடு அரசு இதனை ஏற்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், FSSAI (மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம்) இன் செயல் அப்பட்டமான இந்தி திணிப்பு நடவடிக்கை என சாடினார். மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
கட்சி வேறுபாடின்றி பாஜக உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை FSSAI தலைவர் ராஜேஷ் பூஷணுக்கு கடிதம் எழுதினார். அதில், பிரதமர் நரேந்திர மோடி பிராந்திய மொழிகளுக்கு எப்போதுமே முன்னுரிமை வழங்குபவர் என குறிப்பிட்டிருந்தார். மாநில அரசு நிறுவனங்கள் தங்களின் பிராந்திய மொழிகளிலேயே எழுத அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதே போன்று மற்ற அரசியல் கட்சிகளும் இந்தி வார்த்தை இடம் பெறுவதற்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். இதனிடையே, FSSAI அமைப்பு இன்று (30.03.2023) தனது உத்தரவை மாற்றியமைத்துள்ளது. Curd என்ற ஆங்கில வார்த்தையுடன் அடைப்புக்குறிக்குள் பிராந்திய வார்த்தைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
ஆனால் இந்த அறிவிப்பிலும் தயிர் என்ற தமிழ் மொழிச்சொல் அடைப்புக்குறிக்குள் வரலாம் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் இடம் பெற எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் என்பது, மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.
எந்த நிறுவனமும் பேக் செய்யப்பட்ட உணவை வழங்கும் போது, அதில் உள்ள பொருட்கள் உள்ளிட்ட விவரங்கள் மக்களுக்கு புரியும் வகையில் சென்றடைய வேண்டும் என்பதற்கும் FSSAAI அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்கிறது. இதனால் பேக் செய்யப்பட்ட கவர்களில் எவ்வாறு அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கும் இந்த அமைப்பிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். எனினும் இம்முறை மொழி சார்ந்த பிரச்சனை தென் மாநிலங்களில் புயலை கிளப்பியுள்ளது.