பெங்களூரு(கர்நாடகா): காவிரி நீர்பிடிப்புப்பகுதியில் கடந்த 4 மாதங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தமிழ்நாட்டுக்குத்தேவையான நீர் அளவை விட அதிகமாக காவிரி ஆற்றில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை திறக்கவேண்டிய 101 டி.எம்.சி தண்ணீருக்குப் பதிலாக 4 மடங்கு கூடுதலாக 416 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் திறப்பு குறித்த நீதிமன்ற உத்தரவு: காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை மாற்றி உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி, தமிழ்நாட்டின் பிலிகுண்டுலு நீர்த்தேக்கத்துக்கு ஒவ்வொரு ஆண்டிற்கும் (ஜூன் 1 முதல் மே 31 வரை) 177.25 டி.எம்.சி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.
எந்த மாதத்தில் எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதையும் நீதிமன்றம் தனது உத்தரவில் நிர்ணயித்துள்ளது. அதுமட்டுமின்றி, காவிரி நீர் மேலாண்மைக்காக மத்திய அரசின்கீழ் நீர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் உத்தரவில் குறிப்பிடப்பட்ட அளவு நீர் திறக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. உத்தரவின்படி ஜூன் முதல் செப்டம்பர் இரண்டாவது வார இறுதி வரை 101 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் தமிழ்நாட்டிற்கு 416 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
திட்டமிட்டதைவிட 315 டி.எம்.சி நீர் அதிகமாக திறக்கப்பட்டுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகும்.
இதையும் படிங்க:காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.., 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!