லக்னோ: உத்தரப்பிரதேச மாநில அரசு நடத்தும் குழந்தைகள் காப்பகத்தில் நான்கு பெண் குழந்தைகள் அடுத்தடுத்து நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பிப்ரவரி 10 மற்றும் 12-க்கு இடையில் மூன்று சிறுமிகளும், நான்காவதாக நேற்று (பிப்.14) ஒரு பெண் குழந்தை என நான்கு குழந்தைகள் தொடர்ந்து நிமோனியாவால் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தலைமை மருத்துவ அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், நிமோனியா பாதித்த குழந்தைகளை பராமரிக்க போதுமான வசதிகள் குழந்தைகள் காப்பகத்தில் இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இறப்புகள் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மாவட்ட திட்ட அலுவலர் விகாஸ் சிங் உத்தரவிட்டுள்ளதாகவும், உயிரிழந்த குழந்தைகளின் உடற்கூராய்வினை விரைவில் நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குழந்தை பராமரிப்பு கண்காணிப்பாளருக்கு காரணம் கேட்டு (Show cause) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அலட்சியம் காட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள வசதிகளை மேற்பார்வையிட தினேஷ் ராவத் பொறுப்பேற்றுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: சிமெண்ட் குழாயில் கிடந்த புலியின் உடல்.. மரணத்தில் சந்தேகம்..