மூசாபர்பூர்: பீகாரில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 3 வயது பெண் குழந்தை உள்பட 4 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்தயாலு ரயில் நிலையம் அருகே ஏராளமான குடிசை வீடுகள் அமைந்துள்ளன. இந்நிலையில், நள்ளிரவில் அந்த குடிசைப் பகுதியில் திடீரென தீ பற்றியது. நள்ளிரவு 1.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பொது மக்கள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்து உள்ளனர். முதலில் மூன்று வீடுகளில் பற்றிய தீ மெல்ல வேகமடுத்து அருகில் உள்ள குடிசைகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது. வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் பதறி அடித்துக்கொண்டு உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சில மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 3 வயது பெண் குழந்தை உள்பட 4 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறுமிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தபோது, தீ விபத்து ஏற்பட்டதால் எழுந்து, வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தீவிர தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், குடிசைகளின் முகப்புப் பகுதியில் தீ பிடித்ததால் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் 10க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. தீக்காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகப் போலீசார் தெரிவித்து உள்ளனர். 4 முதல் 5 பேர் தீவிர தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம் இருப்பதாகப் போலீசார் கூறி உள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் முழுமையாகத் தெரியவராத நிலையில், இது சமூக விரோதிகளின் செயலா அல்லது தற்செயலாக நடந்த விபத்தா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீடுகளில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் தீக்கிரையானதால் பொதுமக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகினர். தீ விபத்துக்கான காரணம் என்னவென்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்திய அதிகாரிகள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சிறுமிகளின் சடலம் குறித்து மருத்துவர்களிடம் தகவல் கேட்டு அறிந்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக தீர விசாரிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
இதையும் படிங்க : DK Shivakumar’s Helicopter: ஹெலிகாப்டரில் மோதிய கழுகு - ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய டி.கே.சிவக்குமார்!