கொல்லம் (கேரளா): இந்தியாவின் உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதியான பாத்திமா பீவி (96), கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் இன்று காலமானார். பாத்திமா பீவி 1927-இல் கேரளாவின் பத்தனம்திட்டாவில் பிறந்தார். இவர், திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1950ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வழக்கறிஞராக தனது பணியைத் துவங்கினார்.
1950இல் நீதித்துறையில் தனது பயணத்தை துவங்கிய பாத்திமா பீவி விரைவிலேயே நீதித்துறையில் முன்சிஃப் ஆக உயர்ந்தார். பின்னர் மாஜிஸ்திரேட்டாக, மாவட்ட அமர்வு நீதிபதியாக, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராகவும் உயர்ந்தார்.
பின்னர் பாத்திமா பீவி 1983ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 1989ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். மேலும், நீதித்துறையின் இவ்வளவு உயர் பதவிக்கு வந்த முதல் முஸ்லிம் பெண் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1992இல் ஓய்வு பெற்ற நீதிபதி பாத்திமா பீவி தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக பணியாற்றினார். பின்னர் 1997 முதல் 2001 வரை தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றினார்.
மேலும் இவர் தமிழக ஆளுநராக இருந்த காலத்தில் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றினார். 1990இல் டி.லிட் மற்றும் மகிளா சிரோமணி விருது, பாரத் ஜோதி விருது மற்றும் யு.எஸ்-இந்திய பிசினஸ் கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) வாழ்நாள் சாதனையாளர் விருது என பல்வேறு கௌரவ பட்டங்களையும் பெற்றுள்ளார்.