புதுச்சேரி: மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து வட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் தென்னிந்தியாவிலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (ஜூன்18) புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்தில் புதிய ஆள் சேர்க்கை இல்லாமல் ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ராணுவத்தில் பணிப்புரிய ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமனம் செய்ய மத்திய அரசு அக்னிபத் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளதை ஏற்கமுடியாது. பிரதமரின் இந்த திட்டத்தால் நாட்டில் மிகப்பெரிய கலவரம், கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
அக்னிபத் திட்டம் என்பது பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கம் சேர்ந்து செய்த சதி திட்டம். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வலுப்படுத்தவே, இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை நிபந்தனைகள் இன்றி உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.
அவ்வாறு இல்லை என்றால் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கலவரம் தற்போது தென் மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்படும். கடந்த காங்கிரஸ் ஆட்சியை விமர்சனம் செய்த ரங்கசாமி, தற்போது ஏன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொண்டு வந்த திட்டங்களை பார்த்து அண்டை மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்தவர்கள் தற்போது குடும்ப அட்டைகளை ரத்து செய்து விட்டு பக்கத்து மாநிலங்களுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: அக்னிபத் திட்டத்தை எதிர்த்து சென்னை போர் நினைவுச்சின்னத்தில் இளைஞர்கள் போராட்டம்...