பிரியங்கா காந்தி கைது: புதுச்சேரியில் நாராயணசாமி போராட்டம் - புதுச்சேரி மாநில செய்திகள்
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர், பன்வீர்பூர் கிராமத்தில் நேற்று (அக்.3) விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் மற்றும் பத்திரிகையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க பன்வீர்பூர் கிராமத்திற்கு இன்று (அக்.4) அதிகாலை சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார்.
பிரியங்கா காந்தி கைது
இதனைத்தொடர்ந்து பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு அண்ணா சாலைக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யதை கண்டித்தும் பிரதமர் மோடியைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
நாராயணசாமி போராட்டம்
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து வடசென்னை காங்கிரசார் ஆர்ப்பாட்டம்