இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய மூன்று தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.
மேலும், சைடஸ் காடில்லா தடுப்பூசிக்கும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள வெளிநாட்டவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் பெருமளவிலான வெளிநாட்டவர் வசித்துவருகின்றனர். குறிப்பாக, மெட்ரோ நகரங்களில் அவர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இந்தப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தியாக உள்ளதால் கரோனா பரவல் அதிகம் காணும் வாய்ப்புள்ளது. எனவே, அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும்விதமாக வெளிநாட்டவர் தங்களின் கடவுச்சீட்டை அடையாள அட்டையாகக் காட்டி கோவின் (CoWin) தளத்தில் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 51 கோடியே 34 லட்சத்துக்கும் மேலான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 40 கோடியே மூன்று லட்சம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 11 கோடியே 31 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ”இனி இயல்பு வாழ்க்கை என்பதே பேரிடர்களுக்கு நடுவில்தான்” - ஐபிசிசி ஷாக் ரிப்போர்ட்