மங்களூரு: கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியின் மாணவிகள் விடுதியில் கடந்த 5ஆம் தேதி, இரவு உணவாக நெய்சோறு மற்றும் சிக்கன் கபாப் வழங்கப்பட்டுள்ளது. இதைச் சாப்பிட்ட மாணவிகளுக்கு நள்ளிரவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மாணவிகளுக்கு நள்ளிரவில் வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளை விடுதி ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தற்போது வரை சுமார் 137 மாணவிகள் மங்களூருவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தற்போது மாணவிகளின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அச்சம் காரணமாகவே ஏராளமான மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சில மாணவிகளுக்கு மட்டுமே நீரிழப்பு போன்ற பிரச்னைகள் இருந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். விடுதியிலிருந்து மாணவிகள் சாப்பிட்ட உணவு மாதிரிகளையும் சேகரித்தனர். அதேபோல், போலீசாரும் சம்மந்தப்பட்ட கல்லூரியின் விடுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். உணவு நஞ்சானது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - இளைஞர் படுகாயம்!