கோனசீமா (ஆந்திரா): ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் உள்ள சிவகோடு கிராமத்தில் இருக்கும் மீன் குளத்தின் கரையில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில், திடீரென தீ கொளுந்துவிட்டு எரிந்துள்ளது. இது குறித்து கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகள், விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
தீ முற்றிலும் அணைக்கப்பட்ட நிலையில், 350 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு சிமென்ட் மூலம் மூடப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க, ஓஎன்ஜிசி அதிகாரிகள் தண்ணீரையும், மண்ணையும் பயன்படுத்தினர்.
தீயை விரைவில் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போர்வெல்லைச் சுற்றி உள்ள வாயுவை எரிய விட்டு, அதன்பின் மண் மற்றும் தண்ணீர் கொண்டு தீ அணைக்கப்பட்டதாக கொத்தபேட்டா துணைப் பிரிவு காவல் அதிகாரி கே.வி.ரமணா தெரிவித்து உள்ளார்.
தீ பற்றி எரிந்த போர்வெல்லைச் சுற்றி, ஆள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும், உயிர் சேதமோ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்று ரமணா மேலும் தெரிவித்து உள்ளார். ரசோல் மண்டல் பகுதியில் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து, நீண்ட தொலைவில் இந்த பழைய ஆழ்துளைக் கிணறு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக கோனசீமா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.ஸ்ரீதர் கூறியதாவது, “இது மீன் குளத்தின் கரையில் உள்ள ஆழ்துளைக் கிணறு. அதேநேரம், இது பழைய ஆழ்துளைக் கிணறு ஆகும். விவசாயி, காலை வேளையில் இந்த ஆழ்துளைக் கிணற்றை இயக்கியபோது, முதலில் தண்ணீர் வெளிவந்து உள்ளது. பின்னர் எரிவாயு வெளியேறத் தொடங்கி உள்ளது.
சிறிது நேரத்தில், தீ மளமளவென கொளுந்து விட்டு எரியத் தொடங்கி உள்ளது. இந்த சம்பவம், அந்த பகுதியில் காட்டுத் தீ போல் பரவிய நிலையில், எங்களுக்கும் தகவல் வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தோம்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் எரிவாயுவின் மூலத்தை தொழில்நுட்பக் குழு கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு உள்ளது. இந்த குழுவின் அதிகாரிகள், விவசாயி புதிதாக கரையைத் தோண்டி எடுத்தாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் ஆய்வு செய்து வருகிறோம்” என தெரிவித்து உள்ளார்.
மேலும், மேற்கு கோதாவரி மாவட்டம் நர்சாபூர் அருகே உள்ள ருஸ்தும்பாடா பகுதி ஓஎன்ஜிசி குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக, குளத்தின் அருகே ஓஎன்ஜிசி குழாய்கள் இல்லை என்பதைக் கவனித்த ஸ்ரீதர், 'கேஸ் கிக்' (பொதுவாக துளையிடும் போது ஏற்படும் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றத்தால் எதிர்பாராத விதமாக ஆழ்குழாய் கிணற்றில் வாயு நுழைவது) ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம் எனவும் கூறி இருந்தார்.