மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய விஷவாயுவை சுவாசித்த 5 பேர் உயிரிழந்தனர். மத்தியப்பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் தனேலா என்ற பகுதியில் தனியார் உணவு நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலையில் பதப்படுத்தப்பட்ட செர்ரி பழங்களும், சர்க்கரை இல்லாத ரசாயனங்களும் தயார் செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் இருந்து இன்று காலை 11 மணியளவில் விஷவாயு வெளியேறி உள்ளது. அப்போது, இதனை சுவாசித்த தொழிலாளர்கள் ஐந்து பேருக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
உடனே ஐந்து நபர்கள் மருத்துவமனை சென்ற நிலையில், அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் ஐந்து தொழிலாளர்களும் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். பின்னர், அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இறந்தவர்கள் 5 பேரில் 3 பேர் ராமவ்தார் குர்ஜார் (35), ராம்நரேஷ் குர்ஜார்(40), வீர்சிங் குர்ஜார்(30) சகோதரர்கள் ஆவர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசாரணை செய்து வருகின்றனர். தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி இறந்தவர்களுக்கு மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மொரெனா மாவட்டத்தில் தனேலா கிராமத்தில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இறந்ததை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு இந்த கடினமான நேரத்தில் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், அவர்கள் குடும்பத்தாருக்கு மன தைரியத்தை கடவுள் அளிக்க வேண்டுமென இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என 'X' வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் அமேசான் மேலாளர் சுட்டுக்கொலை!