ஆந்திர பிரதேசம்: ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் மாவட்டத்தில் உள்ள மல்லேகுடிபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி புல்லலசெருவு கொண்டாரெட்டி (55). இவர், தனது நிலத்தில் நெல் மற்றும் பருத்தி சாகுபடி செய்து வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு வந்ததால், நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து மூன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.
அதேபோல் தனக்கு தெரிந்தவர்களிடமும் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினார். அதன் பிறகும் விவசாயத்தில் போதிய அளவு வருவாய் கிடைக்காததால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தார். மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், மூன்று நாள்களுக்கு முன்பு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி நரசிம்மப்பா (46), கடன் தொல்லை காரணமாக, கடந்த 2ஆம் தேதி பூச்சி மருந்து குடித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று (செப்.3) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல் நந்தியால் மாவட்டத்தில் உள்ள நாடிமிகேரியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீஹரிக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக போதிய விளைச்சல் இல்லாமல் வருவாய் பாதிக்கப்படுள்ளது. இதனால் வங்கியில் சுமார் 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். விவசாயத்தில் வருவாய் கிடைக்காததால், நர்சரி வைத்தார்.
அதிலும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர், தனது மனைவியுடன் சேர்ந்து நேற்று (செப்.3) பூச்சி மருந்து குடித்தார். அதில், ஶ்ரீஹரி உயிரிழந்த நிலையில், அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதே நந்தியால் மாவட்டத்தில் மற்றொரு சோக சம்பவம் நடந்துள்ளது. குவ்வலகுண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த மந்தா வெங்கடேஸ்வர ரெட்டி (59) என்ற விவசாயி, கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.
கடனை அடைப்பதற்காக வேலைக்கு செல்ல முடிவு செய்து, குடும்பத்துடன் கர்னூலுக்கு குடிபெயர்ந்தார். அங்கும் வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த அவர், விநாயகர் சதூர்த்திக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதையடுத்து கடந்த 2ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோல் பல்நாடு மாவட்டத்தில் ஒப்பிசர்லாவில் நெலபதி வெங்கடேஷ்வர்லு (51) என்ற விவசாயி, கடன் தொல்லை காரணமாக வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். விவசாயிகள் தற்கொலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் சில நாள்களில் அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.