கேரளா: ஐக்கிய அரபுகள் நாட்டிலிருந்து வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் இருந்த மாதிரிகள், புனேவில் உள்ள தேசிய ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டது. இதன் முடிவுகள், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
இதுவே இந்தியாவின் முதல் குரங்கம்மை தொற்று பதிவானதாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ், “ஷார்ஜா - திருவனந்தபுரம் இண்டிகோ விமானத்தில் வந்த பாதிக்கப்பட்ட நபருடன் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்ததால், இந்த ஐந்து மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்கள் அனைத்திலும் தனிமைப்படுத்தும் வசதிகள் அமைக்கப்படும். கடந்த ஜூலை 12 ஆம் தேதி தரையிறங்கிய இந்த விமானத்தில், 164 பயணிகளும் 6 கேபின் பணியாளர்களும் இருந்தனர்.
மேலும் பாதிக்கப்பட்டவரின் பைகளை சோதனை செய்தவர்கள், பெற்றோர், தலா ஒரு ஆட்டோ டிரைவர், டாக்ஸி டிரைவர், தனியார் மருத்துவமனையின் தோல் மருத்துவர், பாதிக்கப்பட்ட நபருக்கு முதலில் சிகிச்சை அளித்தவர் மற்றும் விமானத்தில் அவரது இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த 11 சக பயணிகள் தற்போது முதன்மை தொடர்பில் உள்ளனர்.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் தங்களை சுயபரிசோதனை மேற்கொண்டு, 21 நாட்களில் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் சுகாதார அலுவலர்களிடம் புகார் செய்ய வேண்டும். பயணிகளின் பலரது தொலைபேசி எண்கள் கிடைக்காததால், காவல்துறை உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர்.
குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரப் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அதேநேரம் குரங்கம்மை குறித்து பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'பாலியல் உறவு மூலமாக குரங்கம்மை வைரஸ் பரவுதா?' - அலெர்ட் செய்த WHO!